515. "மின்னல்" கவிதைகள் - விருந்தினர் இடுகை
பதிவர் "மின்னல்" எனது திருப்பாவை இடுகைகளின் வாசகி. 30 திருப்பாவை இடுகைகளுக்கும் பின்னூட்டம் இட்டு இருக்கிறார், வாசித்துத் தான் இட்டாரா என்று தெரியாது ;-) எது எப்படியிருப்பினும், நன்றிக் கடனாக அவர் எழுதிய கவிதைகளுக்கு என் வலைப்பதிவில் விளம்பரம் தருவது என்று முடிவெடுத்து விட்டேன் :-)
நான் கவிதை அதிகம் வாசித்ததில்லை, அதனால், அது குறித்து அதிகம் தெரியாது. இந்த இடுகை, கவிதை ரசிக்கும் என் வலைப்பதிவு வாசகருக்காக! மின்னலின் மற்ற கவிதைகளை அவரது வெள்ளித்திரையில் காண்க :)
எ.அ.பாலா
*******************************************************
குடைக்குள் வானம்
உனது குடை விரிப்புகளில் சட்டென
அடங்கியது எனக்கான வான்
தனித்திருத்தல்
நிசப்தம் மழையென
நிரம்பி வழிந்த ஓரிரவில்
உன்னோடு பேசிக் கொண்டிருந்தேன்
என்னோடு துணையாக
தனிமை மட்டும்
வானுக்கு வண்ணமேற்றுதல்
உன் மூச்சு காற்றின்
வெம்மையில்
விரிந்து பரந்திருந்தது
என் வானம்
குறித்த நேரத்திற்கு
ஒரு நிமிடம் முன்னமே
ஓடிச் சென்று
ஒளிந்து கொண்டாய்
உன் கடவுளரிடம்
நீ விட்டு சென்ற
ஒற்றை செருப்பையும்
சில்லென்ற சிரிப்பையும்
தேடிக் கொண்டிருந்த
கணத்தில் வெடித்து
சிதறியதென் வானம்
தெறித்த மேகத்தின்
ஒரு துகள் விழி வழி கரைந்தது
மறு துகள் உயிர் கலந்தது
மற்றுமொன்று நெஞ்சம் நிறைத்தது
அவசரமாய் ஒரு துகளை மட்டும்
கையோடு இறுக்கினேன்
எப்போதாவது
மீண்டும் வரையபடுமென்
வானத்திற்கு
வண்ணமேற்றுவேன்
அத்துகள் கொண்டு
நிதர்சனம்
கரை புரண்ட வெள்ளமாய் காவேரி
கடக்க கிடைப்தென்னவோ கொள்ளிடம் மட்டுமே...
திரும்ப கிட்டாதவை
சிறுவயதில் அம்மாவிடம்
அடிவாங்கி தந்த
தொலைந்த
ஒற்றை கால் கொலுசு
தேர்வு நேரத்தில்
திருடு போன
சிற்பியாய்
செதுக்கிய குறிப்பேடு
தேர்ந்த ரசனையோடு
தேடித் தேடி தெரிவு செய்த
பூப்போட்ட கைக்குட்டைகள்
பிடித்தவரின் பெயரையும்
ப்ரியத்தையும்
ஒருசேரநினைவுபடுத்தும்
சாவிக்கொத்து
மனனம் ஆகாத
அழைக்கபட வேண்டிய
அனைவரின் எண்ணும்
தன்னுள் அடக்கிய
தொலைந்து போன
கைபேசி
ப்ரியமானவர்
அசாதாரணமாக அளித்த
அழகான பேனா
கண்ணும் மனமும்
கவர்ந்தவரிடம்
லயித்த மனம்
மேலும்.....
அவர் பிரியத்தில்
மீண்டும் மீண்டும்
தொலையும்
நான்
காற்றை மொழி பெயர்த்தல்
காற்றை உதிர்த்து
மொழிபடைத்தேன்
உன்
காதில் மோதி
நொறுங்கி விழுந்தன
வாக்கியங்கள்
கையோடு மிஞ்சியது
சிதலமான
கற்றை சொற்கள்
எல்லை
அழகிய கோலங்கள் கூட
வாசல் தாண்டி உள் வருவதில்லை
நீராலானது
தொடங்கவுமில்லை முடிக்கவுமில்லை
தயங்கவுமில்லை தடங்கலுமில்லை
கலக்கமுமில்லை கலங்கலுமில்லை
நீராலானது நம் உறவு
காட்சிப் பிழை
எத்தனை முயன்றாலும் மிதக்கும் நிலவின்
கறையை அகற்ற முடியவில்லை நதியலையால்
தினசரி சோம்பல்
தேனீர் மேசையில் சிதறி
கிடக்கும் நாளேடுகள்
சமையல் அறையின்
நீண்ட நாள் பிசுக்கு
உணவு மேசையில் அலுவல்
சம்மந்தப்பட்ட கோப்புகள்,
வார இதழ்கள், சுவைக்கும்
கவிதைகள், எழுத்துக்கள்
சுவரோரத்து ஒட்டடைகள்
தொலைக்காட்சி பெட்டியின்
தூசி படலம்
தினந்தோறும் சோம்பல்
விருத்தினர் வரும் போது
சுத்தமாகும் வீடு
மீண்டும் தினசரி சோம்பல்
மற்றுமொரு விருந்து வரை
புகைவண்டி கவிதைகள்
குறித்த நேரத்தில் வருமென்று தெரிந்தாலும்
தண்டாவளத்தின் தொடுவானத்தை
அடிக்கடி எட்டிப் பார்க்கும் பேதை மனம்
---------------
புகைவண்டி வந்து போன நடைமேடை
போல வெறுமை சூழுலும்
நம் ஒவ்வொரு சந்திப்பின் முடிவும்
------------------
புகைவண்டி உதிர்த்துவிட்டு போன
மனிதர்கள் போல திசைக்கொன்றாய்
நினைவுகள்
3 மறுமொழிகள்:
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் :-)
அண்ணா உங்க திருபாவை பதிவுகள் அனைத்தையும் முழுமையாக படித்தேன் என்று உங்களுக்கே தெரியும். இருந்தாலும் உங்களுக்கு சந்தேகம் தான். ஆனா நன்றிகடன் என்றெல்லாம் சொல்லி என்னை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தலாமா?
மின்னல்,
நமக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்பதை நிரூபிக்கிறீர்கள் ;-) கூல் :)
Post a Comment